கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் பதாகையை காட்டிய நிலையில், அதனைப் பறிக்க முற்படும் திமுக கூட்டணி கவுன்சிலர்கள். | படம்: ஜெ மனோகரன்

 
தமிழகம்

மெட்ரோ ரயில் விவகாரம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் மோதல்

எஸ்.கோவிந்தராஜ்

கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, திமுக – அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இரு மாதங்கள் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் கா.ரங்கநாயகி உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி கூட்ட அரங்கில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக கவுன்சிலர்கள், ‘மெட்ரோ ரயில் திட்டம் வரக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தவறான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பியதாக’ குற்றஞ்சாட்டியதுடன், அது தொடர்பான பதாகைகளுடன், மாநகராட்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி மன்ற வளாகம் முன்பு இரண்டு தரப்பும் மாறி மாறி முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கியது. அப்போது, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மேயர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

அப்போது அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் எழுந்து, திமுக அரசு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை முறையாக தயாரிக்காததால் தான் திட்டம் பறிபோனது எனத் தெரிவித்தார். மேலும், அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணி கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரை சூழ்ந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். இரு தரப்பிலும் கடுமையான வாக்குவாதம் நடந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கையில் வைத்திருந்த பதாகைகளை திமுக கவுன்சிலர்கள் பிடுங்கி கிழித்து எறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகிய இருவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, நடந்த மாநகராட்சி கூட்டத்தில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாநகராட்சி கூட்ட அரங்கில், ரகளையில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை, இரு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கூட்டத்தில் அறிவித்தார். கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.

செம்மொழிப் பூங்கா கட்டணம்: கோவை காந்திபுரத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறந்துவிடப்பட உள்ளது. இந்நிலையில், நுழைவுக் கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், செம்மொழி பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நடைபாதை உபயோகிப்பதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ.100, கேமராவிற்கு ரூ.25 , வீடியோ கேமராவிற்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட ஒளிப்பதிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், குறும்பட ஒளிப்பதிவுக்கு ரூ.2000 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தக் கட்டணம் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT