பெங்களூருவுக்கு தமிழக பேருந்துகள் செல்லாததால் ஓசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஓசூர்: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்தும் கன்னட ஜாக்கிருதி வேதிகே என்கிற அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டத்துக்குகு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போராட்டம் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தருமபுரி மண்டல அறிவுறுத்தலின்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் பெங்களூரு செல்லும் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளன.
மறுஉத்தரவு வரும் வரையிலும், போராட்டம் முடியும் வரையிலும் தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் இரு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழகப் பேருந்துகள் எல்லை தாண்டத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழக்கம்போல தமிழக எல்லையைக் கடந்து இயங்கி வருகின்றன. அதே போல் தமிழக பதிவெண் கொண்ட கார் மற்றும் கனரக வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகின்றன.
பெங்களூரு செல்லும் பயணிகள் சிரமமின்றி பயணிக்க கர்நாடகப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகரப் பேருந்துகளின் சேவையைச் சூழ்நிலைக்கு ஏற்ப எல்லை வரை அதிகரிக்கப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.