தமிழகம்

‘மேகேதாட்டு அணை கட்டப்பட்டால்...’ - பேரவையில் சவுமியா ‘அலர்ட்’ பட்டியல்

வெற்றி மயிலோன்

சென்னை: “தமிழகத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் தான் மேகேதாட்டு அணையை கட்டப்போகிறார்கள். மேகேதாட்டு அணையைக் கட்டக் கூடாது என்பதுதான் நம் நிலைப்பாடு. எனவே, இதில் முதல்வர் எந்தவித பேச்சுவார்த்தை முயற்சியும் எடுக்க தேவையில்லை” என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி, “காவிரியில் ஆண்டுக்கு 780 டிஎம்சி தண்ணீர் வருகிறது என்பது ஒரு கணக்கு. இதில் கர்நாடகாவுக்கு 285 டிஎம்சிதான் உரிமை. தமிழகத்துக்கு 404 டிஎம்சிக்கு உரிமை உள்ளது. அது பேச்சுவார்த்தை மூலமாக படிப்படியாக குறைந்து 175.25 டிஎம்சி ஆகிவிட்டது. இந்த 175.25 டிஎம்சி தண்ணீரை மாதாந்திர அட்டவணைப்படி நமக்கு வழங்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி நமக்கு ஒருமுறை கூட அவர்கள் தந்ததே கிடையாது.

ஜூன் மாதம் 9.18 டிஎம்சி தண்ணீர் திறந்திருக்க வேண்டும், ஆனால், அவர்கள் திறந்துவிட்டது 2 டிஎம்சி தான். ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 1 டிஎம்சி தண்ணீர்தான் திறந்துள்ளார்கள். கர்நாடகா சட்டத்தையோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையோ, உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ மதிப்பதே கிடையாது. அதனால் தன் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது காவிரியில் திறந்துவிடுவது கூட கபினி அணையில் இருந்து வரும் உபரி நீர்தான். கர்நாடகாவில் பெய்யும் மழையை ஹேமாவதி, கிருஷ்ணசாகர் அணைகளில் தேக்கி வைத்துவிட்டார்கள். இப்போது கேரளாவில் பெய்யும் மழையை தேக்கிவைக்கும் கபினி அணையில் இருந்துதான் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்கள். சட்டப்படியோ, ஆணைய தீர்ப்பின்படியோ நமக்கு தண்ணீர் திறக்கவில்லை. கர்நாடகாவில் வெள்ளம் வந்துவிட கூடாது என்றுதான் நமக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்கள்.

மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேகேதாட்டு விவகாரத்தில் சட்ட முன்னெடுப்புகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் தான் மேகேதாட்டு அணையை கட்டப்போகிறார்கள். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரக்கூடாது என்றுதான் இந்த அணையை கட்டுகிறார்கள். இந்த அணை கட்டப்பட்டால் 3 வனவிலங்கு சரணாலயங்கள், 12,500 ஏக்கர் காடுகள், அரியவகை விலங்குகள், உயிரினங்கள் அழிந்துபோகும். பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என்பதுதான் நம் நிலைப்பாடு. எனவே, இதில் முதல்வர் எந்தவித பேச்சுவார்த்தை முயற்சியும் எடுக்க தேவையில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நாம் ஒத்த முடிவோடு டெல்லி செல்ல வேண்டும்” என்றார்

SCROLL FOR NEXT