புதுடெல்லி / சென்னை: மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்.22-க்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.
மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிந்த வழக்கு, மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் தொடர்ந்த வழக்கு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர் கே.பரமேஷ்வர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதைஏற்ற நீதிபதிகள் மேகமலை தொடர்பான வழக்கைசெப்.22-க்கு தள்ளிவைத்தனர். அப்போது, கே.பரமேஷ்வர் தரப்பு வழக்கறிஞர், மேகமலை வழக்கை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள், அடுத்த வாரம் வேறுபல வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதால் மேகமலை வழக்கை 22-ம் தேதியே விசாரணைக்கு எடுக்க முடியும் என திட்டவட்டமாக கூறினர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண் டும். பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட வேண்டும்.
ஏனெனில் ஆக்கிரமிப்புக்கான மிக முக்கிய காரணமானவர்களே அந்தத் தோட்ட உரிமையாளர்கள் தான் எனவும், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ள யாராக இருந்தாலும் அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு உள்ளிட்டவற்றை துண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.