குமார ராணி மீனா முத்தையா
சென்னை: செட்டிநாடு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியும், குமார ராஜா முத்தையா செட்டியாரின் மனைவியுமான குமார ராணி மீனா முத்தையா ஊட்டியில் காலமானார். அவருக்கு வயது 93.
குமார ராணி மீனா முத்தையா வயது முதிர்வு காரணமாக கடந்த 25 நாட்களுக்கும் மேலாக ஊட்டியில் உள்ள தனது குடும்பத்தின் மூதாதையர் இல்லத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்றவர் நேற்று காலை வழக்கமான நேரத்துக்கு எழவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து பங்களாவில் இருந்த பணியாளர்கள் குமார ராணியின் அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் அசைவின்றி இருந்திருக்கிறார். உடனடியாக அவர் ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதையடுத்து குமார ராணி மீனா முத்தையாவின் உடல் நேற்று மாலை கோவையில் இருந்து விமானத்தி்ல் சென்னை கொண்டுவரப்பட்டு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு மாளிகையில் உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10 மணி அளவில் செட்டிநாடு மாளிகையில் இருந்து குமார ராணி மீனா முத்தையாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, மயிலாப்பூர் மயானத்தில் இறுதிச் சடங்கு கள் நடத்தப்படுகின்றன.
கல்விச் சேவை: மறைந்த குமார ராணி மீனா முத்தையாவின் கணவர் குமார ராஜா எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார் 1970-ல் காலமானார். இதையடுத்து குமார ராணி மீனா முத்தையா தன்னை பொதுச் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். 1986-ல் சென்னை அடையாறில் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளியை நிறுவினார். பின்னர், குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் தொடங்கி வெற்றிகரமாக வழிநடத்தினார்.
தமிழக அரசு விருது: குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினை பள்ளி மூலம், நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்தார். தமிழக அரசின் ‘வாழ்நாள் கைவினை பொக்கிஷ விருது’, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் கவுரவ முனைவர் பட்டம், பல்வேறு மதிப்புமிக்க கலாசார சபைகளிடமிருந்து ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘செட்டிநாடு அரசர் குடும்பத்தை சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா, கலைச்சேவை, கல்விச் சேவை இரண்டையும் தமது வாழ்வின் இருபெரும் லட்சியங்களாக கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர். தஞ்சாவூர் கலைக்கு புத்துயிர் கொடுத்து, அதற்காகவே குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினை கலை பள்ளியின் மூலம் பயிற்சியும் அளித்து வந்த அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்’ என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட செய்தியில், ‘செட்டிநாடு குமார ராணி மீனா முத்தையா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பன்முகத் திறமை கொண்டவரும், புகழ்பெற்ற கல்வியாளருமான மீனா முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.