| படம்: ம.பிரபு|
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5% உள் இடஒதுக்கீட்டில் 614 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 7,157 எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம்) இடங்களும், 1,383 பிடிஎஸ் (பல் மருத்துவம்) இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு மொத்தம் 72,633 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பிரிவினருக்கான நேர்முக கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்த 280 பேரில், 13 எம்பிபிஎஸ் மற்றும் 2 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 366 பேர் விண்ணப்பித்ததில், 10 எம்பிபிஎஸ் மற்றும் ஒரு பிடிஎஸ் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 224 இடங்களில், விண்ணப்பித்த 108 மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் வழங்கப்பட்டன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 3,806 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், தகுதி பெற்ற 614 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
சேர்க்கை ஆணைகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ராம், நிக் ஷிதா ஆகியோர் ‘வுஷூ’ தற்காப்புக் கலை விளையாட்டு வீரர்கள்.
இதில் நிகில் ராம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியிலும், நிக் ஷிதா சேலம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றனர்.
அதேபோல, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார், தனது விடாமுயற்சியால் நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்றுள்ளார்.
34 ஆண்டுகள் கழித்து தனது மருத்துவக் கனவு நிறைவேறியதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்கிடையே, பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வும் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.