திமுக கூட்டணியில் கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கிய 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. கட்சியின் பதிவை தக்கவைக்க ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இம்முறை மதிமுக-வுக்கு மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி, சீர்காழி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், சீர்காழியில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீர்காழியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் வேட்பாளர் ரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “சீர்காழி தொகுதியில் கள நிலவரம் குறித்து திமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தனி சின்னத்துக்கான வெற்றி வாய்ப்பு என்பது குறைவாகவே உள்ளது. இதனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதே சரியானதாக இருக்கும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
ஸ்டாலின் வரவேற்பு: இதனிடையே வைகோவின் இந்த முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘ஆருயிர் அண்ணன் வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க. வெல்வோம் ஒன்றாக” எனக் கூறியுள்ளார்.