வைகோ
சென்னை: “மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது,” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமர் மோடி 3 முறையல்ல, 33 முறை தமிழகத்துக்கு வந்தாலும் பாஜவை இங்கு கால் பதிக்க வைக்க முடியாது. மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும். இண்டியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் தலைமை ஏற்க வேண்டுமென மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குரல்கள் வருவது திமுகவுக்கு பெருமை. கூட்டணியில் இருப்பவர்களும் பெருமைப்படுகிறோம்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் கலகலத்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றார்.
மேலும் தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, “திரைப்படங்களைப் பார்த்து சில இளைஞர்களுக்கு விருப்பம் வந்திருக்கிறது. அதை பார்த்து அவர்கள் செல்கிறார்கள். ஆனால் அது தேர்தல் முடிவுகளில் வெற்றியை, தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தாது” என்றார்.