மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. அமெரிக்க வரி கொடுமையில் இருந்து தப்பிக்க, ஜரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் என தெரிவித்து இருக்கின்றார்கள்.
ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின்புதான் அமலுக்கு வரும். அதுவரை மத்திய அரசு எப்படி சமாளிக்க போகின்றது? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கோவை, கரூர், திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை.மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகளை நாங்கள் என்றைக்கும் வைக்கவே இல்லை. அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் எங்களுக்கு இல்லை. மீண்டும் 2026-ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார். திராவிட மாடல் ஆட்சி தொடரும். கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். எத்தனை தொகுதிகள் கேட்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.