வைகோ
மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் இன்று (மார்ச் 27) தொடங்குகிறது. இதையொட்டி எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய மதியம் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாகப் பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் ஒப்படைக்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன ராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணி அளவில் ஆட்சி மன்றக் குழுவினர் முன்னிலையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெயர்கள் உடனடியாக வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரே நாளில் விருப்ப மனு விநியோகம், விருப்ப மனு தாக்கல் மற்றும் ஆய்வு என அனைத்து நடவடிக்கைளையும் முறைப்படி முடித்து வேட்பாளர்களை அறிவிக்க மதிமுக தலைமை திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘சிரித்துக் கொண்டே அழுகின்றோம்’ - மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக குழுவினருடன் மதிமுக குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், "மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட விருப்பப் பட்டியலில் இருந்தே 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. நாங்கள் கேட்ட தொகுதிகளே கிடைத்துள்ளது மகிழ்ச்சிதான்.
அதேசமயம், எங்களுடைய தகுதி, தரத்துக்கு ஏற்ப ‘சீட்’தரவில்லையே என்ற வருத்தமும் எங்களுக்கு இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்... நாங்கள் சிரித்துக் கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம். மதிமுக-வின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இரண்டாவது, எங்களுக்கு கொடுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் எங்களுடைய சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது" என்றார்.