திமுக கூட்டணியில் தங்களுக்கான தொகுதிகள் குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியாவதால் கூட்டணியைவிட்டு வெளியேற வைகோவுக்கு மதிமுக-வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. அப்போது தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திமுக வற்புறுத்தலால் உதயசூரியன் சின்னத்திலேயே அக்கட்சி போட்டியிட்டது.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக மதிமுக-வும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதுடன் சொந்தச் சின்னத்தில் போட்டியிடவும் விரும்புகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், 12 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை மதிமுக முன்வைத்ததாகத் தெரிகிறது.
ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள், தனி சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் 3 தொகுதிகள் என திமுக தரப்பில் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதை ஏற்க முடியாமல் மதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒரு சிலர் திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இது குறித்து மதிமுக மாணவர் அணி முன்னாள் துணைச் செயலாளர் ரா.சத்தியகுமரன் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ‘மாமனிதர் வைகோ அவர்களே, ஈரத் துண்டை போட்டு கழுத்தறுத்து இன்றும் நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக- விடம் இருந்து உடனே வெளியேறுங்கள்.
கொள்கை எதிரிகள் கடந்த 2017-ம் ஆண்டு திராவிட இயக்கத்தை நிர்மூலமாக்க நினைத்த போது, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நமது கழகம் நிபந்தனையின்றி திமுக-வுக்கு ஆதரவு கொடுத்தது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மூலமாக மறைந்த ஈரோடு அ.கணேசமூர்த்திக்கு திமுக நெருக்கடி கொடுத்து அவரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்தது.
அதன் பிறகும் 2021 சட்டமன்ற தேர்தலில் எட்டப்பன் ஒருவரின் தலைமையில் குழு அமைத்தீர்கள். அது தவறு என நேரில் ஆதாரத்துடன் கருத்துத் தெரிவித்த போதும் எங்கள் வாதங்களை தட்டிக் கழித்தீர்கள்.
ஆனால் 2024-ல், ‘செத்தாலும் தனி சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும்’ என்று பேசி அறைகூவல் விடுத்த, முதன்மைச் செயலாளர் துரை வைகோவால் இயக்கம் பாதுகாக்கப்பட்டுவிட்டது.
நமக்கு தற்போதும் போக்கிடம், புகலிடம் இருந்தாலும், அடுத்த வீட்டு பிள்ளைக்கு இந்த நொடி வரை பாலும், பாயாசமும், கொடுத்தும், நமது குழந்தைகளுக்கு வெறும் பச்சை தண்ணீர் மட்டுமே கொடுப்பதை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?’ இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.