தமிழகம்

SIR | மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,378 வாக்காளர்கள் நீக்கம்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 75,378 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எச்.எஸ்.ஸ்ரீகாந்த் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்:

சீர்காழி (தனி): ஆண் 1,15,853 / பெண் 1,16,901 / மூன்றாம் பாலினத்தவர் 12 மொத்தம் 2,32,766.

மயிலாடுதுறை: ஆண் 1,11,670 / பெண் 1,14,144 / மூன்றாம் பாலினத்தவர் 26 மொத்தம் 2,25,840

பூம்புகார்: ஆண் 1,23,930 / பெண் 1,25,578 / மூன்றாம் பாலினத்தவர் 8 என மொத்தம் 2,49,516

மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 3,51,453, பெண் வாக்காளர்கள் 3,56,623, மூன்றாம் பாலினத்தவர் 46 என மொத்தம் 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த அக்.27-ம் தேதி நாளின்படி பட்டியலில் இடம்பெற்றிருந்த 7,83,500 வாக்காளர்களில், 75,378 வாக்காளர்கள் தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

அந்த வகையில் உயிரிழந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், நிரந்தர முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு மற்றும் இதர காரணங்களுக்காக சீர்காழியில் 24,932, மயிலாடுதுறையில் 19,162, பூம்புகாரில் 31,284 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த அக்.27-ம் நாளின்படி, 862 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக 88 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்போது மொத்தம் 950 வாக்குச்சாவடிகள் மாவட்டத்தில் உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை http://voters.eci.gov.in, www.elections.tn.gov.in என்ற இணைய தளங்களிலும், Voters Helpline செயலியினை பதிவிறக்கம் செய்தும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT