தமிழகம்

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வழக்கமான அளவிலேயே அதிகபட்ச வெப்பநிலை

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (ஏப்.10) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

          

ஏப்.12-ம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 13, 14 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கக்கூடும். 12, 13 தேதிகளில் ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, தேனி மாவட்டம் பெரியகுளம், ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் தலா 4 செமீ, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT