திமுக, மார்க்சிஸ்ட் தொகுதி பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, இந்திய கம்யூ. 5, மதிமுக 4, முஸ்லிம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மார்க்சிஸ்ட் கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளை கேட்டது. ஆனால், கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளதால் 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று திமுக தெரிவித்தது. இதனால் உடன்பாடு ஏற்படாமல் இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் குழுவினர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். முடிவு எட்டப்படாத சூழலில் நேற்றும் மார்க்சிஸ்ட் குழுவினர் ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும், 5 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முடியும் என்று ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று இரவு மார்க்சிஸ்ட் கட்சியினர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து திமுக - மார்க்சிஸ்ட் இடையே பல நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.