சென்னை: உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக அறிவித்து எஸ்.ஐ.ஆர். வாக்குரிமையை பறித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
பெ.சண்முகம்: வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களில் 66 லட்சம் பேர் முகவரி அற்றவர்கள் அல்லது காண முடியாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 27 லட்சம் பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மொத்த வாக்காளர்களில் 99 சதவீதம் பேருக்கு படிவம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் 99 சதவீதம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இறந்தவர் எண்ணிக்கை முரண்பாடாக இருக்கிறது.
உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று அறிவித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தற்போதைய எஸ்ஐஆர் நடைமுறையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் நீக்கம் செய்யப்பட்டுள்ள 97.37 லட்சம் வாக்காளர்களில் இறந்து போனவர்கள், இரு முறை பதிவானவர்கள் என்பதைத் தவிர்த்து 66 லட்சம் பேர் அவரவர் முகவரியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய வாக்குகளைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதாகும். எனவே, இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட முகவரியில் இல்லையென நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 லட்சம் வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் இணைக்க வேண்டும்.
இறந்து போனவர்கள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவர்களில், பலர் உயிரோடிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிஹாரை போன்று தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கலாமென பாஜக நினைத்துக்கொண்டுள்ளது. இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இன்னபிற ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும்.