விருதுநகர் சந்தையில் பூக்களை வாங்கிய பெண்கள்.
விருதுநகர்: விருதுநகர் சந்தையில் ஒரு கிலோ முல்லைப் பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
விருதுநகரில் மளிகைப் பொருட்களைப் போல மலர் சந்தையும் புகழ்பெற்றது. அருப்புக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளிலிருந்து விருதுநகர் சந்தைக்கு தினமும் மல்லிகை மற்றும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாக பூக்களை வாங்கிச் சென்று, பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று சனிப்பிரதோஷம், இன்று சிவராத்திரி என்பதால் பூக்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
விருதுநகர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ நேற்று ரூ.1,700-க்கு விற்பனையானது, ஆனால், அதைவிட அதிகமாக முல்லைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதேபோல, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1,600, செவ்வந்தி ரூ.300, அரளி ரூ.300, சம்பங்கி ரூ.400, ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.200 என்ற விலையில் விற்பனையாகின. மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பூக்களை வாங்க விருதுநகர் மலர் சந்தையில் குவிந்தனர்.