சென்னை: தமிழகத்தின் வருவாயை அதிகரித்து கடன் சுமையை கட்டுப்படுத்துவதே தவெக அரசின் முக்கிய நோக்கம் என்று பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரியவில்சன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பதவியேற்ற முதல் நாளிலேயே மாநிலத்தின் நிதிநிலை தொடர்பாக விரிவான அறிக்கையைத் தயாரிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
அதில் 3 துறைகளுக்கான அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அதில் எந்த அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் வெளிப்படையாக தெரிவிப்போம்.
மத்திய அரசின் கிராமப்புறத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.12,643 கோடியும், மின்வாரிய இழப்பை ஈடுகட்ட ரூ.5,000 கோடியும், விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ.5,932 கோடியும், இலவச மின்சாரத்துக்கு ரூ.1,545 கோடியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
டெண்டர்களை வழங்குவதில் முந்தைய அரசு செய்த முறைகேடுகளை ஆராயத் தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, முதல்வர் விஜய்யை புகழ்ந்து, “கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம், மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்’’ என்ற பாடலை அமைச்சர் மரிய வில்சன் பாடினார்.
அமைச்சரின் பதில் உரைக்குப் பிறகு, பேரவையில் நடைபெற்ற விவாதம்: தங்கம் தென்னரசு (திமுக): கடந்த ஆண்டின் உண்மையான செலவினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை மேற்கொள்ளக் கூடாது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்ததற்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதும் ஒரு காரணம். ஆனால், இந்த ஆண்டு அதில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 60 முதல் 70 நாட்களில் அரசுக் கருவூலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி கொண்டு வந்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அது மாநில அரசின் சொந்த வருவாயா அல்லது மத்திய அரசின் மானியங்களா? இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.48,696 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்காக ரூ.11 ஆயிரம் கோடியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்பின்னும் தற்போது வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரம் கோடியாக உள்ளதே? அமைச்சர் மரிய வில்சன்: கலால் வருவாயில் மட்டும் சுமார் ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதில் உரிமக் கட்டணம், மதுபாட்டில்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் உருவாக்கப்படுகிறது.
மோட்டார் வாகன வரியைப் பொருத்தவரை, பேன்சி எண்கள் ஏலம் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மூலம் சுமார் ரூ.750 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
முத்திரை மற்றும் பதிவுத்துறை வருவாயில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. சில கட்டணங்களில் திருத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வருவாய் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுதவிர ஜிஎஸ்டி, சுரங்க வருவாய் உள்ளிட்ட பல்வேறு இனங்களிலும் கூடுதல் வருவாயை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு அதிக கடன் வாங்குவதை கட்டுப்படுத்துவதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். எனவே, எவ்வளவு தூரம் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியுமோ, அதே அளவுக்கு வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.