அமைச்சர் மரிய வில்சன்

 
தமிழகம்

மரிய வில்சன் வழக்கு: புகார்தாரரான சகோதரர் மனைவி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான தாக்குதல் வழக்கின் புகார்தாரரான அவரது சகோதரர் மனைவியை நாளை ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, நான்கு முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான காஜா மொய்தீன் கிஸ்தி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச தீர்வு மையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரேயொரு அம்சம் தவிர்த்து மற்ற விவகாரங்களில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகவும், புகார்தாரர் ஒப்புதலின் பெயரில்தான் இந்த விவகாரம் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஆனால், புகார்தாரர் தரப்பில் இரு தரப்பினரிடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, புகார்தாரர் நாளை ஆஜராகி அவர் தரப்பு விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT