கரூர்: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் மார்ச் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அதன் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கரூர் தனியார் ஹோட்டலில் இன்று (மார்ச் 27) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியது: “வரும் மே 5-ம் தேதி திருவாரூரில் 43-வது வணிகர் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து 5,000 பேர் பங்கேற்கின்றனர்.
தேர்தலை திருவிழா என்கின்றனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து வியாபாரிகளுக்கு இருண்ட காலமாகவே உள்ளது. தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை என்ற பெயரிலேயே வியாபாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
கரூரில் மார்ச் 25-ம் தேதி அரிசி மூட்டை ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கி வைத்துக் கொண்டு ஆவணங்கள் முறையாக இருந்தப்போதும் வாடிக்கையாளர் போன் எண் மாறியிருந்ததால் வியாபாரியிடம் ரூ.1.13 லட்சத்தை அபகரித்துவிட்டனர். வீட்டு வாசலில் நின்று வியாபாரிகளிடம் பணம் பறித்து வருகின்றனர். இது கடுமையான அத்துமீறல் என்பதை வணிகர் சங்க பேரமைப்பு வன்மையாக கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.
தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அதிகத்தொகை கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனக்கறியுள்ளார். ஆனால் அவர்கள் தலைமையின் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற காரணத்தினால் தான் வரும் மார்ச் 31-ம் தேதி சென்னையில் முதற்கட்டமாக ஒரு ஆர்ப்பாட்டத்தை தொடங்கவிருக்கிறோம். இது தொடக்கம் தான், நிறைவல்ல. தீர்வு ஏற்படும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவிப்போம்.
உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறக்கூடிய வியாபாரிகள் ஏப்.1-ம் தேதி முதல் ஒரே ஒரு முறை உரிமம் பெற்றால் போதும், புதுப்பிக்க தேவையில்லை. ரூ.1.5 கோடிக்கு கீழ் வர்த்தகம் உள்ள நிறுவனம் மாநில அரசிடமும், அதற்கு மேல் உள்ள நிறுவனங்கள் மத்திய அரசிடம் உரிமம் பெற்றால் போதும் ஆயுட்கால உரிமத்தை மாநில அரசின் அழுத்தத்தினால் மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு உரிமங்கள் முறையை ஒற்றை சாளர முறையில் ஒரே முறை ஆயுட்கால உரிமமாக வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக அனைத்து கட்சிகளிடமும் எங்கள் கோரிக்கைகளை வழங்கியுள்ளோம். யார் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்து அறிவிப்போம்.
உயிரை மாய்க்கும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது. யார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறதோ அங்கு அசம்பாவிதம் நடந்தால் அந்த தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும். வெளியூரில் உள்ளவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நிலைப்பாட்டை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மார்ச் 31-ம் தேதி நடைபெறும் முதற்கட்ட ஆர்ப்பாட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம். அதற்கடுத்த போராட்டம் குறித்து 2-ம் கட்ட போராட்டத்தில் அறிவிப்போம். ஏப்.23-ம் தேதி வரை எங்கள் போராட்டங்கள் தொடரும்.
தேவைப்படும் நிலை ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு செய்யவும் தயாராக உள்ளோம். அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் முதற்கட்டமாக மார்ச் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது” என்று விக்கிரமராஜா கூறினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.