மாணிக்கம் தாகூர்
விருதுநகர்: “மோடி அரசை எதிர்த்துப் பேச பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா, அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா, அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் ரூ.80 கோடியில் புல்லலக்கோட்டை ஜங்சன், சூலக்கரை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் குறித்தும், மாவட்ட விளையாட்டரங்கம்- அரசு மருத்துவக் கல்லூரி இடையே கட்டப்பட்டுள்ள இரும்பு நடை மேம்பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், புல்லலக்கோட்டை ஜங்சன், மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே உள்ள நடை மேம்பாலம், சூலக்கரை மேம்பாலப் பணிகள் அனைத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 3 மாதங்களில் முடிப்பதாக தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டரங்கம்- அரசு மருத்துவக் கல்லூரியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலத்தில் லிப்ட் அமைக்கும் பணி அடுத்த மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதற்கான மின் கட்டணம் முழுவதையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே ஏற்க உள்ளது. ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை மின் கட்டணம் வரும் எனக் கூறப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொய்வாக நடப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. 3 மாதத்தில் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு கொண்டுவந்தபோது நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது. தரமான மருத்துவ கல்வி முறையை கொண்டுவர முயற்சி மேற்கெள்ளப்பட்டது. இதற்கு தகுதி தேர்வு வேண்டும் என்று நீட் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் நிலைக்குழு அறிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
நீட் அறிவித்தபோது அனைத்து கட்சியும் வரவேற்றன. அதிமுகவில் 9 எம்.பி.க்கள் இருந்தன. யாரும் நீட் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு தரமான கல்வியை உருவாக்கும் என நினைத்தோம். மக்கள் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு சட்டத்தை நிறைவேற்றவில்லை.
ஆனால், பாஜக 2026ல் நீட் தேர்வை சட்டமாக்கியது. 2017ல் அனிதா தற்கொலைக்கு பிறகு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி வாய் திறக்கவில்லை. ஆனால், தேசிய தேர்வு ஆணையம் முறைகேடுதான் பல குழந்தைகளின் தற்கொலைக்கு காரணம்.
மோடி அரசை எதிர்த்துப் பேச பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா, அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா?. அமித் ஷாவின் குரலாக அதிமுகவும், பாமகவும் மாறிவிட்டன.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக கண்டனம் தெரிவித்து கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். சம்பந்தப்பட்ட வனத்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய் வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். கர்நாடக அரசு இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் தப்பித்துவிடக் கூடாது.
அமைச்சர் லஞ்சம் வாங்குவது தொடர்பான உரையாடல் உள்ளது என்று அண்ணாமலை கூறுகிறார். இந்த பழக்கத்தை அவர் கைவிட வேண்டும். யார் ஊழல் செய்தார், தவறு செய்தார் என்று தெளிவாக கூற வேண்டும். ரெக்கார்டு செய்யும் பழக்கத்தை பாஜகவோடு அண்ணாமலை விட வேண்டும். ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.
பட்டாசு ஆலைகளில் சிறு மாற்றம் இருந்தாலும் அதிகாரிகள் சீல் வைக்கிறார்கள். அதிகாரிகள் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகளின் பொறுப்பும், பட்டாசு தொழிலும், தொழிலாளர் பாதுகாப்பும் முக்கியமானது. மாவட்டத்தின் மிக முக்கியமான தொழில், பட்டாசு தொழில். சிலர் செய்யும் தவறுகளால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமை. அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 30 சதவிகித பணிகள் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்தனர். மீண்டும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.