தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

‘ரூ.4 கோடி விவகாரம் என்ன ஆச்சு?’ - நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: “முதலில் அந்த தாம்பரம் ரூ.4 கோடி விவகாரம் என்ன ஆச்சு? செட்டில்மென்ட் முடிந்துவிட்டதா என்று நயினார் நாகேந்திரன் சொல்ல வேண்டும்” என தமிழகக் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்றைத் திரிப்பதையும் வாட்ஸ் அப் கட்டுக்கதைகள் அடுக்குவதையும் முழு நேர அரசியலாகக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை மாதிரி ஆகிவிடும் என்ற பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால பிரச்சார யுக்தியைத்தான் நீங்களும் அப்படியே பின்பற்றுகிறீர்கள் போல.

ஏதாவது ஒரு வகையில் காங்கிரஸைக் குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே மனநிலையோடு பேசுவதற்கு முன்பு, சுதந்திர இந்தியாவின் அஸ்திவாரத்தையே கட்டமைத்தது காங்கிரஸ்தான் என்பதை மறந்துவிட்டீர்களா?

பட்டப்பகலில் கண்களை மூடிக்கொண்டு வெளிச்சமே இல்லை என்று வாதிடுபவர்களிடமும், வாட்ஸ் அப் பல்கலைக்கழகப் பாடங்களை மட்டுமே ஒப்பிப்பவர்களிடமும் அணைகளையும் ஐஐடி-களையும் காமராஜர் கட்டிய பள்ளிகளையும் பற்றிப் பேசுவது பாலைவனத்தில் மழை பெய்வதற்குச் சமம் என்பது எங்களுக்குத் தெரியும்.

விசாரணை அமைப்புகளின் நேர்மையைப் பற்றி நீங்களெல்லாம் பாடம் எடுப்பது காதில் ரத்தம் வடிவதைப் போல இருக்கிறது. நீங்கள் முதலில் அந்த தாம்பரம் ரூ.4 கோடி விவகாரம் என்ன ஆச்சு? செட்டில்மென்ட் முடிந்துவிட்டதா என்று சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT