தென்காசி: “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு யார் ஆதரவு அளித்தாலும், அது தமிழகத்துக்கு செய்யும் துரோகம். யார் துரோகம் செய்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. கோஷ்டி இல்லாத காங்கிரஸ் கட்சியாக மாற்ற மாவட்ட தலைவர்கள் தேர்வு பணி வெளிமாநில பார்வையாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பல மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அனைவரிடமும் கலந்து ஆலோசித்து கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சொல்லி இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பாஜகவுக்கு கட்டுப்பட்டு தொல்லியல் துறை செயல்படுகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா சொல்வதைத்தான் தொல்லியல் துறை செய்யும்.
மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தபோது, அப்போது தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்ததார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த மசோதாவை தோற்கடித்தோம். ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் பாஜக குதிரை பேரத்தை நடத்தி வருகிறது. மம்தா பானர்ஜியின் கட்சி, சிவசேனா என ஒவ்வொரு கட்சியாக பாஜக உடைத்து வருகிறது. இன்னும் 36 எம்பிக்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
தொகுதி மறுவரையறைக்கு எந்தெந்த கட்சிகள் எல்லாம் மாற்றி வாக்களிக்கப் போகிறார்கள், யாரெல்லாம் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றப்போகிறார்கள் என்பதை விரைவில் மசோதா தாக்கல் செய்யும்போது பார்க்க முடியும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவை பார்க்கும்போது, மசோதாவுக்கு ஆதரவு அளிக்க ரெடியாகி விட்டோம் என்று சொல்வதுபோல் தெரிகிறது. இந்த மசோதாவுக்கு யார் ஆதரவு அளித்தாலும், அது தமிழகத்துக்கு செய்யும் துரோகம். யார் துரோகம் செய்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். திமுக ஏன் யூடர்ன் அடிக்கிறது என்பது கேள்வியாக உள்ளது.
சட்டப்பேரவையில் 6 தொகுதிகள் காலியாக உள்ளது. எந்த மாநிலத்திலும் இன்ஸ்டால்மென்ட் அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தவில்லை. எத்தனை தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வைத்தாலும் தவெக கூட்டணி வெற்றி பெறும்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. யாராக இருந்தாலும் புகார் வந்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எவ்வளவு குற்றங்கள் குறைந்துள்ளது என்பதை டிஜிபி புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். குற்றங்களே இல்லாத தமிழகம் என்பது லட்சியமாக இருந்தாலும் அதற்கான பாதை கடுமையானது. அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் தென்காசியில் இன்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென் மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர் சிவராமன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதிக் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் குலாம் அகமதுமிர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்பிக்கள் ராபர்ட் ப்ரூஸ், விஜய் வசந்த், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர்கள் செல்வராஜ் (தென்காசி), ராமேஸ்வரன் (திருநெல்வேலி மாநகர்), துரை (திருநெல்வேலி கிழக்கு), ராஜ்மோகன் (விருதுநகர் மேற்கு) கிருஷ்ணமூர்த்தி (விருதுநகர் கிழக்கு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.