மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

“தொகுதி மறுவரையறை மசோதாவை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?”- மாணிக்கம் தாகூர் விளக்கம்

அனலி

சென்னை: “தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த மசோதா சட்டமானால், மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த போக்கை தடுத்து நிறுத்தத் தான் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 தொகுதிகளே நீடிக்க வேண்டுமென்ற வகையில் அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1976 இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து 2001 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.

அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஏ.பி.வாஜ்பாய், இதே நிலையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு 2026 வரை நீட்டிப்பு செய்தார். ஆனால், தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால் மாநிலங்களிடையே வேறுபாடு வளர்ந்து, சமநிலைத்தன்மை சீர்குலைந்து விடும்.

இந்த மசோதா சட்டமானால், ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்கள் தொகையைக் குறைத்த தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குத் தண்டனை கொடுத்தது போலவும், மக்கள் தொகையைக் குறைக்காத வட மாநிலங்களுக்குப் பரிசு கொடுத்தது போலவும் ஆகிவிடும்.

உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம், 41இல் இருந்து 62 ஆக அதிகரிக்கும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மாநிலங்களவை அதிகாரமற்றதாக மாறிவிடும்.

மக்களவையில் 815 எம்.பி.க்கள் இருந்தால், பெரும்பாலானோருக்குப் பேச வாய்ப்புக் கிடைக்காது. தனிப்பட்ட எம்.பி.யின் முக்கியத்துவம் குறைந்து, ‘ஒரு எம்.பி., ஒரு வாக்கு” என்பது அர்த்தமற்றதாகிவிடும்.

ஒட்டுமொத்தத்தில், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.

தமிழகத்தைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து ஒன்றிய பாஜக அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழகத்தின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.

SCROLL FOR NEXT