மானாமதுரையில் பேருந்து நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட ஆகாஷ்டெல்சனின் உறவினர்கள். அடுத்த படம்: உயிரிழந்த ஆகாஷ்
மானாமதுரை: மானாமதுரையில் 2 தொழிலாளர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதாகி, கால் முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில் இறந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (33). கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர் (32). இவர் உணவகத்தில் பணிபுரிகிறார். மார்ச் 5-ம் தேதி இரவு இருவரும் வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றனர்.
கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின பொறியியல் பட்டதாரி ஆகாஷ்டெல்சன் (26) மற்றும் குணா (23) ஆகிய இருவரும் மோதினர்.
இதில், இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பும் அங்கிருந்து சென்றநிலையில், கிருஷ்ணராஜபுரம் மயானம் அருகே ஜெயகுமார், அழகர் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை அங்கு வந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகிய இருவரும் வாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து மேலப்பசலை பாலம் அருகே நின்று கொண்டிருந்த ஆகாஷ்டெல்சன், ஆகாஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதில், தப்ப முயன்ற ஆகாஷ் டெல்சன் பாலத்தில் தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்தவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் கைதான இருவரையும் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் மார்ச் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆகாஷ் டெல்சன் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை போலீஸார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டது.
ஆனால் போலீஸார் தாக்கியதால் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மானாமதுரையில் பேருந்து நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்குவழிச்சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தாக்கிய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண உதவியோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்து, கோஷமிட்டதால் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கி.மீ., வாகனங்கள் நின்றன. இதையடுத்து, மதுரை, ராமேசுவரம் வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் அனைத்தையும் போலீஸார் சிவகங்கை, கமுதி உள்ளிட்ட வேறு வழித்தடங்களில் மாற்றிவிட்டனர்.
இதுகுறித்து ஆகாஷ் டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், தாயார் ஆனந்தி ஆகியோர் கூறியதாவது: எங்களது மகனை ஒரு வழக்கில் தேடுவதாக கூறி, போலீஸார் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போதே உங்களது மகன் கையில் கிடைத்தால் கொன்றுவிடுவோம் என்றனர்.
சிறிது நேரத்தில் எங்களது மகனை கைது செய்துவிட்டதாக கூறி, எங்களை விடுவித்தனர். தொடர்ந்து எங்கள் மகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர். அவனை சென்று பார்த்தபோது போலீஸார் அடித்ததாக கூறினான். இந்நிலையில் திடீரென எங்களது மகன் இறந்துவிட்டதாக கூறுகின்றனர்.
இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, எங்களது மகனின் காலை ஒடித்துவிட்டனர். அதனால் தான் உயிரிழந்துவிட்டான். எங்களது மகன் தவறு செய்திருந்தால் தூக்கு தண்டனை கூட வாங்கி கொடுத்திருக்கலாம். அதற்காக அடித்தே கொன்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.