மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட இளைஞர் கைது செய்யப்ப்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் மலை உச்சியில் ஆய்வு செய்தார்.
நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் ட்ரோன் கேமரா பறந்தது. அனுமதியின்றி ட்ரோன் பறக்க விட்டது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழங்கா நத்தம் பகுதியைச் சேர்ந்த யூடியூபர் மணி (25) என்பவர் ட்ரோன் கேமராவைப் பறக்கவிட்டு, காட்சிகளை பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், ட்ரோன் கேமராவைப் பறிமுதல் செய்தனர்.