சென்னை: மூதாட்டியிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பு, திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டம்மாள் (70). சென்னை துறைமுகத்தில் சுமார் 30 வருடங்களாக துப்புரவுப் பணி செய்து வருகிறார்.
இவர் கடந்த 30-ம் தேதி மாலை துறைமுகத்தில் கொடுத்த 15 நாட்கள் சம்பள பணத்துடன், தனது பணம் சேர்த்து ரூ.11 ஆயிரத்தை சுருக்குப்பையில் வைத்து, அதை துணிகளுடன் ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு 7-வது நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் பட்டம்மாளை மடக்கி, தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டார். மேலும், மூதாட்டியிடம் நீங்கள் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகமாக உள்ளது.
எனவே, உங்களது உடைமைகளை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி மூதாட்டியின் பையை வாங்கி சோதனை செய்தார். அப்போது, அதற்குள் இருந்த ரூ.11 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, அந்த பணத்தை காவல் நிலையத்தில் வந்து பெற்றுச் செல்லுமாறு கூறி விட்டு அந்த நபர் தப்பிச் சென்றார்.
அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, துறைமுகம் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதன் பிறகுதான் வந்தது போலீஸ் அல்ல, வழிப்பறி கொள்ளையன் என்பது தெரிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், மூதாட்டியிடம் பணம் பறித்தது மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த வீராசாமி (40) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.