செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

“மம்தா பானர்ஜி ஆத்திரத்தில் நிதானம் இழந்து பேசுகிறார்” - செல்வப்பெருந்தகை கண்டனம்

வெற்றி மயிலோன்

சென்னை: “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, ஆத்திரத்தில் நிதானமிழந்து, ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று மம்தா பானர்ஜி கூறுகிறார்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்து வருகிற திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரஸும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது, கடுகளவு உண்மை கூட இல்லாதது.

இந்தியாவிலேயே தேசிய அளவில் பா.ஜ.க.வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் எதிர்த்து நாள்தோறும் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருபவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவர் மக்களவையில் பேசுகிறார் என்றுச் சொன்னால், நரேந்திர மோடி அவைக்கு வருவதை தவிர்த்து விடுவதை பார்த்து வருகிறோம். ஏனெனில், அவரது கேள்விக்கணைகளை பிரதமரால் எதிர்கொள்ள முடியாதது தான் காரணமாகும்.

          

கொள்கை ரீதியாக காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் சித்தாந்த ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று, நேற்று தொடங்கியதல்ல. 1925-ஆம் ஆண்டு நாகபுரியில் என்றைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோன்றியதோ, வகுப்புவாத நச்சுக் கருத்துகளை பரப்ப முன்வந்ததோ, அன்றிலிருந்து இன்று வரை பா.ஜ.க.வை எதிர்த்து வருகிற ஒரே இயக்கம் காங்கிரஸ் கட்சி தான். நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தி உட்பட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கடுமையாக விமர்சிப்பதற்கு என்றைக்குமே தயங்கியதில்லை.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நச்சுக் கருத்தினால் மூளை சலவை செய்யப்பட்ட நாதுராம் கோட்சே தான் காந்தியை படுகொலை செய்தான். கோட்சேவின் வழிவந்தவர்கள் தான் இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், என்றைக்குமே காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பா.ஜ.க.வோடு எந்த வகையிலும் சமரசம் செய்து கொண்டதில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க.வை எதிர்த்து செய்து வருகிற விமர்சனத்தைப் போல எந்த மாநில முதல்வரும் செய்திருக்க முடியாது.

தமிழ்நாட்டில் வகுப்புவாத பா.ஜ.க., காலூன்றக் கூடாது, வளரக் கூடாது என்கிற வகையில் கடுமையான ஒரு சித்தாந்தப் போரை நடத்திக் கொண்டிருப்பவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் கடுமையாக எதிர்க்கின்ற காரணத்தினாலேயே வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய பா.ஜ.க.வின் கைப் பாவையாக இருக்கிற அமைப்புகள் மூலம் தி.மு. கழக தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அடக்குமுறைகள் ஏராளம். அவைகளையெல்லாம் அரசியல் பேராண்மையோடு எதிர்த்து தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை திரட்டி பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இத்தகைய கொள்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற நிலையில், கொஞ்சம் கூட பொறுப்பற்ற முறையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க.வை இட்டுக்கட்டி பேசுவதன் மூலம் மம்தா பானர்ஜியின் அரசியல் அறியாமைதான் வெளிப்படுகிறது.

எனவே, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியையும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று சொல்வது மம்தா பானர்ஜியின் ஒரு பொறுப்பற்ற செயலாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, ஆத்திரத்தில் நிதானமிழந்து அவர் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். உடனடியாக இந்த குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT