தமிழகம்

“பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடு என மம்தா பேசுவது அபத்தம்” - ஜோதிமணி எம்.பி காட்டம்

வெற்றி மயிலோன்

சென்னை: பாஜகவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ரகசிய உடன்பாடு உள்ளதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதி, மூன்று முறை மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இப்படிக் கொஞ்சமும் பொறுப்பில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், திமுக கட்சிகளை பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசுவது அபத்தமானது மட்டுமல்ல, கடுமையான கண்டனத்துக்குரியது.

          

தமிழகத்தில் நாங்கள் பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு தினமும் யுத்தம் நடத்திக் கொண்டுள்ளோம். எமது மொழி, இனம், பண்பாடு, வளர்ச்சி அனைத்துக்கும் எதிராக உள்ள பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. அஇஅதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழகத்தில் கால்பதித்து விடக்கூடாது என்பதில் எமது தமிழினம் உறுதியோடு உள்ளது.

எமது தலைவர் ராகுல் காந்தி அச்சமற்று அயராது மோடி அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருகிறார். தமிழகத்தின் உரிமைகளுக்காக முதல்வர் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவோடு சமரசமற்று போராடி வருகிறார்.

தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் நாங்கள் பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் திமுக எப்பொழுதும் எங்கள் பக்கம் நிற்கிறது. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செயவதில்லை. ஆனாலும் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியதில்லை. ஏனென்றால் பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில், நாட்டின் நலன் கருதி எதிர்கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்களும் அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்கு வங்கத்துக்கும், இந்தியாவுக்கும் நல்லது.

நீங்கள் 15 ஆண்டு காலம் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேளுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கூட்டணிக் கட்சிகளை அவதூறு செயவதன் மூலம் நீங்கள் அடையக் கூடியது ஒன்றும் இல்லை. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளம், புதுச்சேரி, அசாம் ,மேற்கு வங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, இந்தியாவைப் பாதுகாக்க எமது தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த மம்தா பானர்ஜி, “தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திறமையான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பியுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை பாஜக அமர்த்துகிறது” என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT