திராவிட வெற்றிக் கழகம் தலைவர் மல்லை சத்யா நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. திமுக கூட்டணியில் மதிமுகவும் உள்ளது. ஆனால், கூட்டணியில் மதில் மேல் பூனையாகத்தான் மதிமுக எப்போதும் இருக்கிறது. அவர்கள் பாஜகவுடன் பேச்சு நடத்தியதை அமைச்சர் எல்.முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் உள்ளது. அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, இலங்கை தமிழர்களின் ரத்தக்கறை காங்கிரஸ் மீது படிந்துள்ளதாக பேசியுள்ளார். அந்த கறை வைகோ மீதும் இருக்கிறது. காங்கிரஸ் தொகுதியை பெற்றுத்தான் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீங்கள் பரிசுத்தமானவர்கள் என்றால் மக்களவை பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். தேர்தலில் தங்களுக்கான பேரம் படிந்து விடும் என்பதனால் தான் வைகோ நடைப் பயணம் தொடங்கியுள்ளார்.