தமிழகம்

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அமைச்சர் வன்னியரசு மீது இந்து முன்னணி குற்றச்சாட்டு

மோகன் கணபதி

சென்னை: ‘மதவெறியைத் தூண்டி மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கோடு பேசிய தமிழக அமைச்சர் வன்னியரசுக்கு வன்மையாகக் கண்டனம்’ என இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு நாட்களுக்கு முன்பாக (ஜூன் 9) ஒரு சில கிறிஸ்தவ அமைப்புகள் சென்னையில் தமிழக அமைச்சர் வன்னியரசு மற்றும் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடத்திய காணொலி, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகரன் கலந்து கொண்டது தமிழக முதல்வரின் முதல் உரைக்கு பொருத்தமில்லாத செயல். எல்லோருக்கும் பொதுவான அரசாக தவெக செயல்படும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறினார். ஆனால், ஜே.சி.டி.பிரபாகரன் அவரது கடந்த கால கிறித்துவ ஊழியத்தின் நினைவில் மதவாத கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதற்கும், மதவெறி கலவரத்தைத் தூண்டி தேச ஒருமைப்பாடுக்கு எதிராக பேசியதற்கும் சாட்சியாக இருந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏவும், தற்போதைய சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னியரசு, அந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும், மத கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ளார். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு நசுக்கியதாக அமைச்சர் வன்னியரசு கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. கணக்குக் காட்டாத என்.ஜி.ஓக்கள் மீதுதான் மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரில் முன்பு இருந்ததைப் போல, நாடு முழுவதும் கிறிஸ்தவ அமைப்புகள் ஒன்றுபட்டு கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் வன்னியரசு பேசியுள்ளார். இது அவர் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை மீறிய செயல். இதற்காக தமிழக ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்யலாம். வன்னியரசின் வரம்பற்ற சட்டவிரோத பேச்சுக்கு அவரை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும். இத்தகைய தேசவிரோத பேச்சுக்களை முளையிலேயே தமிழக முதல்வர் கண்டித்து திருத்த வேண்டும்.

திமுக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், முஸ்லீம் அமைப்புக்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலானவை நாட்டுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், சமூக பதற்றத்தை ஏற்படுத்தி புதிதாக தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள, அரசியல் முன் அனுபவமில்லாத தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று முனைகின்றன.

எனவே, மத்திய, மாநில புலனாய்வு துறையினர் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு தீய எண்ணம் கொண்டோரின் சதி திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும், அமைச்சர் வன்னியரசு மீதும், சட்டப்பேரவை சபாநாயகர் மீதும் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் தமிழக ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT