தமிழகம்

தேனியில் அமைக்கப்பட்டு வரும் பன்முக சுற்றுலா தலம் - மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனியில் முதல் சுற்றுலா தலத்தை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு உடற்பயிற்சி, மாதிரி தீவு, படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு குதூகல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தேனி பாரம்பரிய மற்றும் இயற்கை வளம் மிக்க மாவட்டமாக இருப்பதால் ஏராளமான ஆன்மிக மற்றும் சுற்றுலா வளங்களை அதிகளவில் பெற்றுள்ளன. இருப்பினும் மாவட்ட தலைநகரான தேனியில் இது போன்ற நிலை குறைவாகவே உள்ளது. ஆகவே இங்கு சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறு சமுத்திர கண்மாய் பன்முக சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக 120 ஏக்கர் பரப்பிலான இந்த கண்மாய் கரை பலப்படுத்தப்பட்டு 2.5 கிமீ. நீள நடைப்பயிற்சிக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு உடற்பயிற்சி கூடம், பூங்கா, மாதிரி தீவு கட்டமைப்பு, படகு குழாம் உள்ளிட்ட பணிகள் ரூ.7.40 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த கண்மாயின் மறுகால் மதகு கரைகளை நடைபயிற்சி பாதையுடன் இணைக்க 25 டன் எடையிலான இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

மேலும் கரை நெடுகிலும் பல்வேறு கடைகள், சுற்றுலா மற்றும் கலைநய பொருட்கள் விற்பனை மற்றும் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்டோபர், நவம்பரில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று நீர்வளத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில், இங்கு வெறுமனே ஊஞ்சல், சறுக்கல் என்று வழக்கமானதாக இல்லாமல் ஆர்வம் ஏற்படுத்தும் தன்மையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒரு முனையில் நுழைந்து பல குழப்பமான கிளை வழிகளை கடந்து பின்பு சரியான வழியில் வெளியேறுவதுபோன்று குதூகலம் அளிக்கும் புதிர்பாதை செயல்பாடுகளையும் இங்கு செயல்படுத்த வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT