சவுமியா அன்புமணி
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. தவெக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில், சவுமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைமையில் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக இணைந்தன. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. தவிர, தொடக்கத்தில் இருந்தே தவெக அரசை விமர்சனம் செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக மீது கடும் விமர்சனங்களை வைத்தன. விசிகவும் அவ்வப்போது அரசை விமர்சித்து வருகிறது. இதனால், கம்யூனிஸ்ட்கள், விசிக தலைவர்கள் மீது முதல்வர் விஜய் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, 4 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாமகவை, தவெக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நகர்வுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேநேரம், தவெக அமைச்சர்களில் சிலரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளார். அப்போது, கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி கேட்டபோது, தவெகவினர் கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்தபோது கூட்டணி தலைமை குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிதாக வந்துள்ள தவெக அரசை மட்டும் எதற்கெடுத்தாலும் விமர்சிப்பது நியாயமா. அவர்கள் என்ன முடிவில் உள்ளனர் என்று தெரியவில்லை. அதனால், 4 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாமகவை கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாமகவும், விசிகவும் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளதால், எந்த பிரச்சினையும் இல்லை” என்றனர்.