சென்னை: டாஸ்மாக் கடைகளை தூய்மையாகப் பராமரிக்கவும், பணியாளர்களுக்கான குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளுக்காக வும் ரூ.5000 வரை பராமரிப்பு தொகை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனிடையே, கடை வாடகை, பராமரிப்பு போன்ற செலவுகளை தாங்களே ஏற்பதால் மது பிரியர்களிடம் கூடுதல் தொகை வாங்குவதாக கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பண்டிகை கால முன்பணம், கடை பராமரிப்புக்கு தொகை ஆகியவை வழங்கப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, டாஸ்மாக் கடைகளை தூய்மையாகப் பராமரிக்க, பணியாளர்களுக்கான குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளுக்கான தொகை அக்.1 முதல் வழங்கப்படவுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு: 2003-ம் ஆண்டில் கடைகளின் தினசரி பராமரிப்பு செலவுகளுக்காக மாதம் ரூ.250 வழங்கப்பட்டு வந்தது, அந்த தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2023-ம் ஆண்டு முதல் ரூ.750 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடை பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் அடிப்படை தேவைகளுக்காக மாதம்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 842 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரமும், நகராட்சி பகுதிகளில் உள்ள 835 கடைகளுக்கு தலா ரூ.4 ஆயிரமும், கிராமப்புற பகுதிகளில் உள்ள 2,371 கடைகளுக்கு தலா 3 ஆயிரமும் வழங்கப்படும்.
இதனிடையே முன்பு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.750 நிறுத்தப்படும். அக்.1 முதல் இந்த நடைமுறை தொடங்கும், அக்டோபர் மாதத்துக்கான தொகை, செப்.30-ம் தேதியே வரவு வைக்கப்படும். இதேபோல ஒவ்வொரு மாதமும் அதற்கு முன்னரே இந்த தொகை கொடுக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் கடை மேற்பார்வையாளரின் சம்பளத்துடன் இந்த தொகை வரவு வைக்கப்படும். அவரே இந்த தொகை மற்றும் அதற்கான செலவுகளுக்கு பொறுப்பு.
இந்த தொகையை, கடையை தினசரி சுத்தம் செய்ய, அதற்கான பொருட்கள் துடைப்பம், ரசாயனங்கள், பினாயில் ஆகியவை வாங்கவும், குப்பை தொட்டிகள், கடை சுத்தம் செய்ய நபரை பணியில் ஈடுபடுத்துவதற்கு, குடிநீர் மற்றும் அதற்கான வாட்டர் டிஸ்பென்சர் ஆகியவை வாங்க, கடைக்கு தேவையான பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்ற தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.