டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால், முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை: தமிழக டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஸ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் சென்னை காவல் ஆணையர், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத் துறை ஐஜி மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், தமிழக காவல் துறை தலைமை டிஜிபி என அழைக்கப்படும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரும் மாற்றப்பட்டார்.
தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகவும், அயல் பணியாக டெல்லி சென்று எல்லை பாதுகாப்புப் படைப் பிரிவு டிஜிபியாகவும் பணியாற்றி வந்த மகேஷ் குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று காலை 11 மணியளவில் டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு பல்வேறு பிரிவுகளில் டிஜிபிக்களாக உள்ள வெங்கடராமன், சந்தீப் மித்தல், பால நாகதேவி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய் குமார், ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உட்பட பலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
டிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கூறும்போது, ‘‘தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக்க, போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையின் இந்த முயற்சிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமைச் செயலகம் சென்று முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த 1994-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். 22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியானவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாப் மொழியில் சரளமாக பேசக் கூடியவர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர். சிபிஐ, சிபிசிஐடி உட்பட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட பணிபுரிந்தவர். சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், பொதுச் சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த கூடுதல் டிஜிபி சங்கர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிஐடியாகவும் நியமித்து உள்துறை செயலர் மணிவாசன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.