தமிழகம்

சமூக வலைதளத்தில் மதுரை மீனாட்சியம்மன் மூலஸ்தான வீடியோ - போலீஸார் விசாரணை

கி.மகாராஜன்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நெரிசலை தவிர்க்க செல்போனுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செப். 17-ல் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கிற்கு பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க செப். 17 முதல் இன்று வரை இலவச பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுச் செல்ல உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. பக்தர்கள் தங்களின் செல்போன்களை செல்போன் சேகரிப்பு மையங்களில் கொடுத்து விட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும். குடமுழுக்கிற்கு பிறகு இலவச பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால் செல்போன் வாங்கும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்க பக்தர்கள் செல்போன்களுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு செல்போன் எடுத்துச் சென்ற சிலர் அம்மன், சுவாமி மூலஸ்தானத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக கோயில் நிர்வாகத்திடமும், காவல்துறையிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீனாட்சியம்மன் கோயில் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டு, வழக்கம் போல் கோயிலுக்கு வெளியே செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT