மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாண்டிய மன்னர்கள், விஜய நகரப் பேரரசர்கள், கர்நாடக மன்னர்கள் உட்பட பலர் ஏராளமான நிலங்களை நன்கொடையாக வழங்கி உள்ளனர். அதற்காகப் பல்வேறு கட்டளைகளையும் ஏற்படுத்தி உள்ளனர். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான். புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரை ராஜா, துரை ராணி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 1930 ஜூன் 6-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் உயில் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோவிலுக்குத் தர்ம காரியங்கள் செய்ய மதுரை அழகர் கோவில் ரோடு, பிபீகுளம் ஹக்கிம் அஜ்மல் கான் சாலையில் உள்ள 1.79 ஏக்கர் (0.72640 சதுர மீட்டர்) ‘அசோக விலாஸ்’ பங்களா மற்றும் தோட்டம் ஆகிய சொத்துகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயில், கோயில் டிரஸ்டிகள், மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், முக்குறுணி விநாயகர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை, நெய்வேதியம், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க வேண்டும். அழகர் கோவில் கருப்பணசாமிக்குச் சந்தனக் கும்பா எடுக்க
வேண்டும்.
இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேரும் 2 ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், ஆண்டுதோறும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இதற்காக அசோக விலாஸ் பங்களா, தோட்டத்தை வாடகைக்கு மட்டுமே விடவேண்டும். கிரயம், அடமானம், ஒத்தி போன்ற எந்த செயலும் செய்ய கூடாது என்று அந்த உயிலில் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2016 ஜூன் 24-ம் தேதி கோயில் பெயரில் இருந்த அந்த சொத்தை வெள்ளைச்சாமி பல்லவராயர் மனைவி ராமாயி ஆயியார் உட்பட 9 பேரின் பெயருக்கு மதுரை வடக்கு வட்டாட்சியர் பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோட்டாட்சியர் விசாரணை அடிப்படையில் வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உத்தரவும் பெறப்பட்டது. மேற்படி சொத்துகளைப் பாதுகாக்க எவ்வித பட்டா பதிவும் கோயில் அனுமதியின்றி செய்யக் கூடாது என்று மதுரை சொக்கி குளம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2018 ஆக.13-ம் தேதி பட்டாவில் உள்ள கோயில் பெயரை நீக்கிவிட்டு புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த வெள்ளைச் சாமி மனைவி ராமாயி, தஞ்சாவூர் சிலத்தூர் மேலத்தெரு செந்தமிழ்ச் செல்வி, புதுக்கோட்டை பிலாவிடுதி அம்மானிப்பட்டு பிரேமா, புதுக்கோட்டை மச்சுவாடி முத்துராணி, வெள்ளைச்சாமி மகன்கள் ராஜ்குமார், ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் சின்னப்பா மனைவி ஜோதி, புதுக்கோட்டை வடக்குராஜ வீதி நாராயணசாமி மனைவி கீதா ஆகிய 10 பேரும் மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான சொத்தை மீண்டும் விற்றுள்ளனர்.
கடந்த 2021 மார்ச் 22 தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சுப்பிரமணி மகன் இளையராஜா, திருவள்ளுர் ராமபுரம் பிரகாஷ் மகன் அனிஷ் ஆகியோருக்கு அவர்கள் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி இளையராஜா, அனீஷ் ஆகியோர் இளையராஜா மனைவி கவிதா, பிரகாஷ், திண்டுக்கல் சிறுமலை பாஸ்கரன் மகன் காளிக்குமார் ஆகியோருக்கு திண்டுக்கல் வட மதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அடமானப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜூலை 25-ல் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக ராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, மதுரை பிபீகுளம் முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், உசிலம்பட்டி இளையராஜா, அனீஷ், முறப்பநாடு முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன், கவிதா, பிரகாஷ், சிறுமலை காளிக்குமார், முன்னாள் வட மதுரை
சார் பதிவாளர் பிரசாந்த் சந்தன கருப்பன் ஆகிய 19 பேர் மீதுமோசடி (420), கூட்டுச்சதி 120(பி) ஆகிய சட்டப்பிரிவுகளில் எஸ்ஐ கண்ணன் வழக்குப் பதிவு செய்துள்ளார். மோசடி செய்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.60 கோடிக்கு மேல் இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தகவல் அறிய செல்லத்துரையைப் போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டநிலையில், மீனாட்சி கோயில் நிலமும் மோசடி செய்யப்பட்ட தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.