மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிடக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தமிழக கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் போது சம்ஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் மந்திரங்களையும் ஓத வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் குடமுழுக்கின்போது பயன்படுத்தபட வேண்டிய தமிழ் மந்திரங்கள் குறித்த விவரங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கவும், அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று யாகசாலை, கருவறை, கோபுர விமானத்தில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் ஆன்மிக மந்திரங்கள் உச்சரிக்கவும், பக்தி பாடல்கள் பாடவும் வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவைப் பின்பற்றி செப். 17-ல் நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கிலும் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் கோவையைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.
கோயில் தரப்பில், ‘கோயில்களில் முந்தைய குடமுழுக்கு விழாக்களில் சம்ஸ்கிருத மந்திரங்களும், தமிழ் மந்திரங்களும் ஓதப்பட்டன. அதேபோல் இந்த குடமுழுக்கு விழாவிலும் மந்திரங்கள் ஓதப்படும்’ எனக் கூறப் பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழகத்தில் ஆகமக் கோயில்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்கள் இடம்பெறுவது குறித்து தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என 2021-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதுதான் நீதிமன்றத்தின் பணி. சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. அரசுதான் சட்டத்தை உருவாக்க முடியும். எனவே, மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுறன’’ என கூறப்பட்டுள்ளது.