படம்: நா.தங்கரத்தினம்

தமிழகம்

திருப்பரங்குன்றம் 144 தடைக்கு ரத்து கோரிய வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் ஆஜர்

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் 144 தடையாணையை ரத்து செய்ய கோரி வழக்கில் மதுரை ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானர். விசாரணை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், வழக்கறிஞர் மலை ராஜா, வழக்கறிஞர் ஜஸ்வந்த் ஆகியோர் சார்பில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான மனுக்களை விசாரிக்க முறையீடு செய்தனர்.

அப்போது அவர்கள், ‘திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு சட்டவிரோதமானது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது. எனவே மதுரை மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய ரிசர்வ் காவல் படை உதவியுடன் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூண் பகுதியில் இன்று கார்த்திகை தீபத்தை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனக் கூறினர்.

பின்னர் நீதிபதிகள், ‘அனைத்து வழக்குகளும் இன்று பகல் 12.30 மணிக்கு விசாரிக்கப்படும். மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை. இதனால், ‘நீதிமன்றத்தில் இருந்து 3, 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரமுடியவில்லையா? ஆட்சியரை நேரில் பார்க்காமல் விசாரிக்க முடியாது’ என்று கூறி விசாரணையை மதியத்துக்கு ஒத்திவைத்தார்.

மதியம் விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜரானார். மாநகர் காவல் ஆணையர் ராஜேந்திரன் காணொளியில் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், ‘தீபத்தூண் மலை உச்சியில் இருக்கும்போது அடிவாரத்தில் 144 தடை பிறப்பித்தது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

மனுதாரர்கள் தரப்பில், ‘இந்த தடையால் பக்தர்களால் கிரிவலம் செல்ல முடியவில்லை. திருப்பரங்குன்றம் செல்லும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் கைது செய்யப்படுகின்றனர். பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறப்பட்டது.

பின்னர் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT