மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கைக் காண அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அமைச்சர் நிர்மல் குமாரின் காரை வழிமறித்தனர். அப்போது, “விஐபிக்கள் அல்ல; பொதுமக்கள் ஓட்டு போட்டுத்தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் என”, அவர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்.17) நடந்தது. காலை 7.35 மணிக்கு கோயில் கும்பத்தில் நன்னீர் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு கும்பத் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கை கோயிலின் மேல் தளத்தில் இருந்து பார்க்க, விஐபிக்கள், நன்கொடையாளர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் என 9 ஆயிரம் பேருக்கும், பொதுமக்களுக்கான அனுமதி என்ற பெயரில் ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வான சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் பாஸ் வழங்கி அனுமதிக்கப்பட்டனர். விஐபிக்களுக்கென்றும் பாதுகாப்பு கருதியும் 4 சித்திரை வீதிகளிலும் பொது மக்கள் யாரும் அனுமதிக்கவில்லை.
ஆனாலும் குடமுழுக்கைக் காண நேற்று நள்ளிரவு முதல் கோயிலை சுற்றிலும் திரண்ட பக்தர்களை சித்திரை வீதிகளில் அனுமதிக்கவில்லை. மாசி, ஆவணி மூலவீதிகளில் இருந்து சித்திரை வீதிக்கு செல்லும் வழிகள் அனைத்தும் பேரிகாடுகளை போட்டு தடை செய்யப்பட்டது. இதனால் ஆவணி மூலவீதி, மாசி வீதிகளில் தான் பக்தர்கள் திரண்டு இருந்து குடமுழுக்கின்போது, கோபுரங்களை பார்த்து தரிசனம் செய்தனர்.
தெற்குமாசிவீதியில் இருந்து அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் சித்திரை வீதிவரை பக்தர்கள் அனுமதித்தாதல் ஏராளான பக்தர்கள் நின்று கிழக்கு கோபுரத்தை தூரத்தில் நின்று தரிசிக்க முடிந்தது.
இந்நிலையில் கும்பாபிசேகம் முடிந்து அமைச்சர் நிர்மல்குமார் காரில் வெளியே வந்தபோது, அவரது காரை வழிமறித்து சூழ்ந்த பக்தர்கள் அவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். “விஐபிக்கள் மட்டும் ஓட்டுப் போட்டு நீங்கள் வெற்றி பெறவில்லை. பொது மக்களாகிய நாங்கள் ஓட்டு போட்டுதான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்,” என, அவரிடம் கேட்டு எங்களை கோபுர தரிசனத்திற்கு அனுமதியுங்கள் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமைச்சர் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், “இந்த குடமுழுக்கைப் பார்க்க, ஏழை, பணக்கார மக்கள் வந்துள்ளனர். கடன் வாங்கிக் கூட சிலர் வந்துள்ளனர். ஆனால் கோபுரங்களைப் பார்க்க உள்ளே செல்ல அனுமதிக்காதது வருத்தம்.
காரில் செல்லும் விஐபிக்கள் மட்டும் தான் மனிதர்களா? விஐபிக்கள் மட்டும் ஓட்டுபோட்டு இவர்கள் ஆட்சி வரவில்லை. பொதுமக்களான நாங்களும் ஓட்டு போட்டதால் தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். விஐபிக்கள் மட்டுமே வரவேண்டும் என, முன்கூட்டியே அறிவித்து இருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம்,” என்றனர்.
தவெக அரசுக்கு எதிராக பக்தர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு:
குடமுழுக்குக்கு பிறகு கோயிலுக்குள் செல்வதற்கு நகைக்கடை பஜாரில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் சித்திரை வீதி வழியாக கோயிலுக்குள் அனுமதிக்க போலீஸாரிடம் கேட்டனர். போலீஸார் மறுத்ததால் நெரிசல் அதிகரித்தது. அப்போது அங்கு வந்த அமைச்சர் நிர்மல் குமார் போலீஸ் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி நின்று பக்தர்களை சமாதானப்படுத்தினார். 10 மணிக்கு மேல் தான் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அதுவரையிலும் அமைதியாக அமருங்கள் என, கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த பக்தர்கள் அமைச்சர், தவெக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.