மதுரை: உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பட்டியலில் இடம்பெற்ற வழக்கறிஞர்கள் பொறுப்பேற்கச் சென்றபோது, அவர்களிடம் அரசாணை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முந்தைய திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகினர்.
இதையடுத்து தலைமை அரசு வழக்கறிஞர், தலைமைக் குற்றவியல் அரசு வழக்கறிஞர், 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற, மதுரை அமர்வுக்கு தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவின. அந்தத் தகவல்களில் மதுரை அமர்வுக்கு சிவில் பிரிவில் 24 அரசு வழக்கறிஞர்கள், குற்றவியல் பிரிவில் 17 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வழக்கறிஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
வழக்கமாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டால் அரசாணை பிறப்பிக்கப்படும். வழக்கமான அரசாணை இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வழக்கறிஞர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய பட்டியலில் இடம் பெற்றிருந்த வழக்கறிஞர்களின் 15-க்கும் மேற்பட்டோர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, ‘தாங்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை (ஜூன் 1) நீதிமன்றம் திறப்பதால் இன்றே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும்’ தெரிவித்தனர்.
ஆனால், நியமனம் தொடர்பாக அரசிடம் இருந்து அரசாணை எதுவும் வராத நிலையில் அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்க அனுமதிக்க முடியாது. அரசாணை வரட்டும் பார்க்கலாம் என அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பிய வழக்கறிஞர்கள் நீதிபதியைச் சந்தித்து, நாங்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம், நாளை (ஜூன் 1) முதல் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீதிபதியும் அரசாணை வராமல் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் சமூக வலைதள பட்டியலில் இடம் பெற்றிருந்த வழக்கறிஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.