மதுரை மாநகராட்சி 
தமிழகம்

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: முன்னாள் திமுக மண்டலத் தலைவர் கணவரிடம் விசாரணை

ஒய்.ஆண்டனி செல்வராஜ், என்.சன்னாசி

மதுரை: திமுக ஆட்சியில் மேயர், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்யும் அளவுக்கு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், ஹோட்டல்கள், மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்தது தொடர்பாக கடந்த அரை நூற்றாண்டாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு ஜூலை 31 வரையில் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்ததில் ரூ.1.50 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

அப்போது, மாநகராட்சி ஆணையாளராக இருந்த தினேஷ்குமாரின் ‘பாஸ்வேர்டு’களை திருடி, இந்த முறைகேடு நடந்திருந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரிக்க தினேஷ்குமார், சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். மேலும், நான்கு பில் கலெக்டர்களையும் ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுத்தார். பில் கலெக்டர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினேஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடி ஏற்படவே, ‘சஸ்பெண்ட்’ செய்தவர்கள் உத்தரவை வாபஸ் பெற்றார். அதன்பிறகு போலீஸார் இந்த சொத்து வரி முறைகேடு விசாரிக்கப்படாமலே புகாரோடு கிடப்பில் போட்டுவிட்டனர்.

இந்நிலையில், ஆணையாளராக வந்த சித்ரா, சொத்து வரி முறைகேட்டை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கத் தொடங்கினார். கிடப்பில் கிடந்த சைபர் கிரைம் புகாரை விசாரிக்க போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் முன்னாள் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், உதவி ஆணையர்கள், முன்னாள் உதவி ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என 25 பேர் வரை போலீஸார் கைது செய்தனர். ஆணையாளராக இருந்த சித்ரா, உதவி ஆணையாளர் உள்பட 19 பேரை ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுத்து சொத்து வரி முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும், மின்சார வாரியத்திடம் (TANGEDCO) இருந்து வணிகரீதியான மின் இணைப்பு (Commercial EB connection) பெற்ற கட்டிடங்களின் விவரங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டார். அவரின் இந்த நடவடிக்கையால் மாநகராட்சிக்கு 10 சதவீதம் வருவாய் அதிகரித்தது.

முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி கடந்த சட்டப்பேரவை நேரத்தில் மேயர் இந்திராணி, ஐந்து மண்டலத்தலைவர்களையும் பதவி விலகக் கூறினார். அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அன்று முதல் தற்போது வரை, மதுரை மாநகராட்சி நிர்வாகம், மேயர், ஐந்து மண்டல தலைவர் இல்லாமல் நிர்வாகம் நடக்கிறது. மதுரை மாநகராட்சியின் சொத்து வரி மறுசீராய்வை முன் உதாரணமாக கொண்டு கடந்த திமுக ஆட்சியிலேயே தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் அனைத்து வீட்டுவரி, சொத்து வரியை மறுசீராய்வு செய்வதற்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன.

சொத்து வரி முறைகேட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மதுரை சரக டிஐஜி அபினேவ்குமார் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் வினோதினி, ஆய்வாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கை விசாரித்தனர்.

ஆனால், இந்த விசாரணையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. போலீஸார், முறைகேடுகளில் ஈடுபட்ட சில மண்டலத் தலைவர்களை தப்பிக்க விட்டதாகவும், தொடர்புடைய பல அதிகாரிகள் விரைவாக ஜாமீனில் வெளிவருவதற்கும் மறைமுகமாக உதவியாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு மீண்டும் சொத்துவரி முறைகேடு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, முறைகேட்டில் தொடர்புடைய சில மாநகராட்சி அதிகாரிகளை மீண்டும் சம்மன் அனுப்பி விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் சொத்து வரி முறைகேட்டில் நேரடியாக தொடர்புடைய ஒரு ஆண் மண்டலத்தலவர் உள்பட நான்கு மண்டலத்தலைவர்களை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ‘‘உதவி ஆணையாளர் வினோதினி தலைமையில் போலீஸார் நேற்று அதிகாலை 5 மணியளவில் மண்டலம் 3 முன்னாள் தலைவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

தூங்கிக் கொண்டிருந்த அவருடைய கணவர் சரவணனை எழுப்பி குதிரைப்படை பகுதியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுபோல், மற்ற முன்னாள் மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா, மண்டலம்-3 மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி கணவர் மிசா பாண்டியன், மண்டலம்-5 மண்டலத் தலைவர் கணவர் விமல் ஆகியோரிடமும் விசாரிக்கவும், அவர்களை அழைத்துவர போலீஸார் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

போலீஸார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவர்கள், வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களது செல்ஃபோன்களும் அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க நேரில் ஆஜராகும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, ’’ என்றனர்.

இந்த சொத்து வரி வரிமுறைகேடு விவகாரத்தில் அதிகாரிகளுக்கும், மண்டலத் தலைவர்களுக்கும் பாலமாக செயல்பட்ட முக்கிய விஐபி ஒருவரும் சிக்குவதாக போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT