தமிழகம்

அமைச்சர் மூர்த்தியை வட்டமிடும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., துணை மேயர்!

திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ஆதரவை நாடுகிறாரா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., துணை மேயர் அமைச்சர் மூர்த்தியை வட்டமிடுவது திடீர் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக எப்போதும் இல்லாத வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். மாநகராட்சி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை மேயர் தலைமையில் நடப்பதை விரும்பாததால் அதிருப்தியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சரிகட்டவே, அவர், அமைச்சரை சுற்றி வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் பதவியை இழந்தார். மேயர் இல்லாததால் துணை மேயர் நாகராஜன், பொறுப்பு மேயராக ஒரு முறையாவது, மாநகராட்சி கூட்டத்தை ‘மேயர்’ அங்கி அணிந்து நடத்திட வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது எண்ணத்திற்கு திமுக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுவந்ததால் மாநகராட்சி கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. துணை மேயருக்கு ஆதரவாக ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்றம் உத்தரவால் வரும் 10-ம் தேதி மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் நடக்க உள்ளது.

          

இக்கூட்டம் மதுரை மாநகராட்சியின் 45-வது கூட்டமாகவும், பட்ஜெட் கூட்டமாகவும் வரும் 10-ம் தேதி நடக்கிறது. துணை மேயர் நாகராஜன், பொறுப்பு மேயராக இக்கூட்டத்தை தலைமையேற்று நடத்த உள்ளதாகவும், தவறாமல் பங்கேற்க மாமன்ற செயலாளர் சித்ரா, அனைத்து கவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

மேலும், இக்கூட்டத்தில் பேச விரும்பும் கவுன்சிலர்கள், தங்கள் கேள்விகளை சுருக்கமாக பேச அனுமதி வேண்டிய துணை மேயர் அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதிருப்தியடைந்த திமுக கவுன்சிலர்கள், கேள்விகள் கேட்க 4 கவுன்சிலர்கள் கொண்ட துணை மேயர் அலுவலகத்தில் எழுதிக்கொடுக்க வேண்டுமா? என்று கொந்தளித்தனர்.

மேலும், கூட்டத்தில் வந்து கையெழுத்துப்போட்டுவிட்டு தொடர்ந்து பங்கேற்காமல் புறக்கணிக்க தற்போது வரை ஆலோசனை செய்து வருகிறார்கள். ஆனால், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தற்போது வரை திமுக கவுன்சிலர்கள், இக்கூட்டத்தில் எப்படி பங்கேற்பது என்று எந்த வழிகாட்டுதலும் வழங்கவில்லை.

ஒட்டுமொத்தமாக திமுக கவுன்சிலர்கள், கையெழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிட்டால், கூட்டத்தை பொறுப்பு மேயராக தலைமையேற்று நடத்தும் கூட்டணி கட்சி துணை மேயரான தனக்கு தர்மசங்கடமாகிவிடும் என்று நாகராஜன் நெருக்கடியிலும், பரிதவிப்பிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால், திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் எந்த எதிர்ப்பும், நெருக்கடியும் கொடுக்காமல் அமைதியாக கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு துணை மேயர் நாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்கும் அரசு விழாக்களில் தனக்கு உரிய கவுரவமும், முக்கியத்துவமும் தரப்படுவதில்லை என்று நெருக்கமானவர்கள் தனது ஆதங்கத்தையும், அதிருப்தியையும் தெரிவித்து அமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆனால், தற்போது அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நாகராஜன் தவறாமல் சென்று வருகிறார்.

ஆனால், அமைச்சர் பி.மூர்த்தியோ, துணை மேயர் நாகராஜனுக்கு பிடி கொடுக்காமல் இருந்து வருவதால் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நடவடிக்கை எப்படியிருக்கும் என்று துணை மேயர் தரப்பினர் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், திமுக கவுன்சிலர்களிலே சிலர் துணை மேயருக்கு கூட்டத்தை எந்த சர்ச்சையும் இல்லாமல் நடத்தி முடிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

அதனால், துணை மேயர் நாகராஜன், தான் ஆசைப்பட்டப்படி, ஒரு நாளாவது பொறுப்பு மேயராக மேயர் அங்கி அணிந்து மாநகராட்சி கூட்டத்தை பட்ஜெட் தாக்கலுடன், கவுன்சிலர்கள் விவாதத்துடன் முழுமையாக நடத்தி காட்டிட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஆனால், திமுக கவுன்சிலர்கள், முழு நேரமும் கூட்டத்தில் இருப்பார்களா? அல்லது கையெழுத்துப்போட்டுவிட்டு எழுந்து சென்றுவிடுவார்களா? என்பது தற்போது வரை தெரியவில்லை. இதனால், வரும் 10-ம் தேதி நடக்கவிருக்கும் மாநகராட்சி கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT