தமிழகம்

மதுரை மாநகராட்சி லஞ்ச விவகாரம்: பொறியியல் பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்தில் பொறியியல் பிரிவு எப்போதும் செல்வாக்கும், அரசியல் தொடர்பு மிக்கதாகவும் இருக்கும். சில லட்சங்கள் முதல் பல ஆயிரம் கோடிகள் வரையிலான ஆன்லைன் டெண்டர், ஆஃப் லைன் டெண்டர்களை அறிவிப்பது, பணி ஆணை உத்தரவு வழங்குவது, புதிய சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது, மாநகரின் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டங்களை தீட்டுவது, அதற்கு அரசு ஒப்புதல் பெறுவது முதல் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பது வரை, பொறியியல் பிரிவு அதிகாரிகள் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

பொதுவாகவே, ஒப்பந்ததாரர்களை அதிகாரிகளும், அதிகாரிகளை ஒப்பந்ததாரர்களும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், பொறியியல் பிரிவு அதிகாரத்துக்கு வரும் அதிகாரிகளை பொறுத்து ஒப்பந்தங்களும், ஒப்பந்ததாரர்களும் மாற்றப்படுவார்கள்.

ஒப்பந்ததாரர்களை ‘கவனிப்பு’ கேட்டு கட்டாயப்படுத்தும்போதும், அதிகாரிகள் மத்தியில் பெறப்பட்ட ‘கமிஷன்’களை சரிசமமாக பகிர்ந்து கொடுக்காதபோதும் ‘கவனிப்பு’ விவகாரம் வெளிச்சத்துக்கு வரும்.

அப்போது அதிருப்தி அதிகாரிகள், விவகாரத்தை சில ஆதாரங்களோடு, உயர் அதிகாரிகளுக்கு ஏதோ ஒருவகையில் தகவல் தெரிவிப்பர். அவர்களும் கண்டும், காணாமல் கடந்து சென்றால், கடைசி நம்பிக்கையாக, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கவனத்துக்குக் கொண்டு செல்வார்கள்.

மாநகராட்சி பொறியியல் பிரிவில் அதிருப்தி கோஷ்டி அதிகாரிகள் பின்னணியிலேயே கடந்த 22-ம் தேதி மாநகராட்சி மைய அலுவலக பொறியியல் பிரிவில் ஒப்பந்தாரர்களிடம் டெண்டர் தொடர்பாக லஞ்சம் கைமாறுவதாக கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொறியியல் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘செப்.22-ம் தேதி ஒட்டுமொத்த மைய அலுவலக பொறியியல் பிரிவு அதிகாரிகளும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால், தலைமை பொறியாளர், அவரின் நேர்முக உதவியாளர் முதல் மற்ற பொறியாளர்கள் யாரும் லஞ்ச பணத்தை வாங்கியதாக கையும், களவுமாக போலீஸாரிடம் சிக்கவில்லை. ஆனால் போலீஸார், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த பணியாளர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த பணத்தை வைத்திருந்த பொறியியல் பிரிவு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, இந்த இருவரிடம் இருந்து பணம் எதுவும் கைப்பற்றாவிட்டாலும், அவர்களையும் சேர்த்து மொத்தம் 14 அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தலைமைப் பொறியாளர் ராமசாமி, சர்ச்சைக்குரிய மாநகராட்சியின் பழைய அதிகாரி ஒருவருடன் கைகோத்து செயல்பட்டதாலேயே, இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். அவரது வழிகாட்டுதலில், ஒரு முக்கிய அமைச்சர், சில எம்எல்ஏ-க்களை சந்தித்துள்ளார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் லஞ்ச விவகாரத்தில் சிக்கிய தலைமைப் பொறியாளர், அவரின் நேர்முக உதவியாளர் உள்பட மைய அலுவலகத்தில் முக்கிய பொறியியல் பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது’’ என்றனர்.

லஞ்ச விவகாரத்தில் நேரடியாக இந்த அதிகாரிகளை பணம் பெறும்போது மாட்டாவிட்டாலும் அவர்களுக்காகவே அந்தப் பணம் எடுத்து வந்ததாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த சர்ச்சை, குற்றச்சாட்டுகளில் சிக்கிய மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளை ‘கூண்டோடு’ மாற்ற நகராட்சி நிர்வாகத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT