தமிழகம்

சவால் விடும் பழனிவேல் தியாகராஜன் - கடும் போட்டி கொடுக்கும் சுந்தர்.சி

கவனம் ஈர்க்கும் மதுரை மத்திய தொகுதி தேர்தல் களம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் தொடர்ந்து இருமுறை சிரமமில்லாமல் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு, இந்த முறை அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி தேர்தல் களத்தில் கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி வேட்பாளராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டு மதுரையில் வந்து இறங்கியதும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர், “நான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் பகுதியை பார்க்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

எவ்வளவு பெரிய கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நான் 20 ஆண்டுகளுக்கு முன் வாராணசிக்கு சென்றுள்ளேன். அப்போது இருந்த வாராணசியையும், இப்போது மோடி வந்தபிறகு இருக்கும் வாராணசிக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது’’ என்று கூறி கொளுத்திப் போட்டார்.

மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக, பழனிவேல் தியாக ராஜனின் தாயார் ருக்மணி உள்ளார். மேலும், மீனாட்சி அம்மன் கோயில் அவரது மத்திய தொகுதிக்குள் வருகிறது. அதனால், அதிருப்தியடைந்த பழனிவேல் தியாகராஜன், ‘‘சுந்தர்.சி-யை சினிமா சங்கி, வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர், 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் அவருக்கு எதையும் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை, தொகுதி வரலாறு தெரியாதவர்” என்றெல்லாம் விமர்சித்தார்.

பின்னர் ‘‘ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு இடத்தில் என்னுடைய திட்டங்கள் உள்ளன, எழுதி வைத்துக் கொள்ளுங்கள், மே-4-ம் தேதி சுந்தர்.சி ஷூட்டிங் சென்று விடுவார்’’ என சவால் விடுத்தார். பதிலுக்கு சுந்தர்.சி-யும், குஷ்புவும், பழனிவேல் தியாகராஜனை, ‘‘தலைக்கணம் கொண்டவர், அவரது அதிகார திமிரால்தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார், நாங்கள் படிக்காதவர்கள்தான், ஆனால் எங்கள் வளர்ப்பு சரியாக இருப்பதால் எங்கள் அப்பா, அம்மா பெயரை காப்பாற்றுகிறோம், நாங்கள் இறக்குமதி வேட்பாளர் என்றால், கனிமொழி, மு.க.ஸ்டாலின், அவர்கள் சொந்த தொகுதியிலா போட்டியிடுகிறார்கள்? அவர்களை பார்த்து இந்த கேள்வியை கேட்பாரா? தோல்வி பீதியில் தரமில்லாமல் பேசுகிறார்’’ என்று விமர்சனம் செய்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு, பிரச்சாரத்தில் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். சுந்தர்.சி-க்கு ஆதரவாக மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி தலைமையில் அதிமுகவினரும், பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக திமுக தலைமை அமைத்த தேர்தல் பணிக்குழுவினரும் தேர்தல் களத்தில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

தவெக வேட்பாளர் மதார் பதூருதீன், நாம் தமிழர் வேட்பாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் மத்திய தொகுதியில் சத்தமில்லாமல் தங்கள் பாணியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களும் இந்த தொகுதியில் கணிசமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், பழனிவேல் தியாகராஜனுக்கும், சுந்தர்.சி-க்கும் இடையேதான் வெற்றிக்கான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய தொகுதியை தவிர்த்த உதயநிதி பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக கனிமொழி, ப.சிதம்பரம், பழநெடுமாறன், தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பிரச்சாரம் செய்துள்ளனர். சுந்தர்.சி-க்கு ஆதரவாக பழனிசாமி, அண்ணாமலை, குஷ்பு, ஏ.சி.சண்முகம், காளியம்மாள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று திமுக வேட்பாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, மணிமாறன், வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்த நிலையில், அவர் மத்திய தொகுதிக்கு வராமல் புறக்கணித்து சென்றுள்ளார்.

முதல்வரின் மருமகன் சபரீசன், பழனிவேல் தியாகராஜனுக்காக மாநகர திமுக நிர்வாகிகளை தேர்தல் பணியில் முடுக்கிவிடும் நிலையில், உதயநிதி, பழனிவேல் தியாகராஜனுக்காக பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்தது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து திமுகவினரிடம் கேட்டபோது, உதயநிதிக்கு போதுமான நேரம் இல்லாததால், குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்து சென்றுள்ளார். மற்றபடி இதில் ஒன்றுமில்லை, என்றனர்.

SCROLL FOR NEXT