மதுரை: திட்டமிட்டபடி வரும் பொங்கல் பண்டிகையின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திறப்பு விழாவை நடத்தும் வகையில், அதன் கட்டுமானப் பணிகள் இரவு, பகலாக வேகமாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் தற்போது பிரம்மாண்டமாக கட்டிடங்கள் உயர்ந்து காணப்படுகின்றன.
மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சரியான ஒத்துழைப்பு இன்றி கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால், தொடங்கப்பட்ட பிறகு கடந்த ஓராண்டில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, மருத்துவ கல்விசார் கட்டிடம், செவிலியர் கல்லூரி, மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவுக்கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவைப் பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ், 2026 பொங்கல் பண்டிகையின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, தற்போது பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன.
மதுரை தோப்பூரில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள்.
அதனால் பணிகள் நிறைவடையும் முன்பே கட்டிடங்கள் பிரம்மாண்டமாக உயர்ந்து காணப்படுகின்றன. கட்டுமானம் இறுதிக் கட்டத்தை அடையும்போது, சர்வதேச தரத்தில் பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் மதுரை எய்ம்ஸ் தோற்றமளிக்கும் என்கின்றனர்.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் தற்காலிகமாக நடந்து வருகிறது. இந்த மருத்துவமனை கட்டுமானப் பணியை விரைவுபடுத்தவும், தேவையான உதவிகளை பெற்றுக் கொடுக்கவும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டவி்ல்லை.
அவர்கள், கடந்த சட்டப்பேரவை தேர்தல், அதன்பிறகு நடந்த மக்களவைத் தேர்தலை தொடர்ந்து அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கும் அரசியல் ஆதாயத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்படுத்துகிறார்களே தவிர, விரைவில் பயன்பாட்டுக் கொண்டுவர ஆக்கப்பூர்வ நடவடிக் கைகளை மேற்கொள்ளவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
திட்டமிட்டபடி, எய்ம்ஸ் மருத்துவமனையை பொங்கல் பண்டிகை நாளில் திறந்தால், முதற்கட்டமாக வெளிநோயாளிகள் பிரிவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு வரும் கல்வியாண்டு முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளையும், புறநோயாளிகள் பிரிவையும் தொடங்கும் அளவுக்கு பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து ‘எய்ம்ஸ்’ நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன. எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்யும். தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்படுகிறது.
முதலில், அந்தக் கல்லூரியை மதுரைக்கு கொண்டு வரவும், அதற்கான கட்டிட வசதியை ஏற்பாடு செய்யவும், மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றனர்.