சென்னை: முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், உடல் நலம் சரியில்லாத தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை காரணம் காட்டி, பாலசுப்பிரமணியனின் மனைவி படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, 2017-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் எந்த நேரத்திலும் உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை சுட்டிகாட்டியுள்ளனர்.
அந்த விதி அமலில் இருக்கும் நிலையில், மனுதாரர் உதவிக்கு ரயில்வே போலீஸார் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம். ஆனால் மனுதாரர் அவ்வாறு செய்யாமல் விதியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளதாக உத்தரவில் கூறியுள்ளனர்.
வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், மனுதாரர் ரயில்வே நிர்வாகத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.