தமிழகம்

கல்வி உரிமைச் சட்டம்: வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பை நிர்ணயம் செய்ய உத்தரவிட முடியாது’ எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமான உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு மட்டும் எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவரான ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படாவிட்டால் பொருளாதாரத்தில் முன்னேறிய வசதியானவர்கள்கூட சாதி அடிப்படையில் இந்த சலுகையைப் பெற அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சமூக ரீதியில் பின்தங்கிய பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்திலும் வருமான உச்சவரம்பை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக கடந்தாண்டு அக்டோபரில் பள்ளிக்கல்வித் துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படவில்லை. இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’ என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்படாத நிலையில், அவர்களுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT