சென்னை: பருவநிலை மாற்றத்தால் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’ தொற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குளிர்காலம் முடிந்து வெயில் சுட்டெரித்து வரும் பருவநிலை மாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவமனைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக, அரசு கண் மருத்துவர்கள் கூறியதாவது: கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் ‘மெட்ராஸ் ஐ’ ஆகும். அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும்.
மெட்ராஸ் ஐ பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ் ஐ, பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். சமீப காலமாக இதுபோன்ற அறிகுறியுடன், மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மெட்ராஸ் ஐ எளிதில் குணப்படுத்தக்கூடியது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். மெட்ராஸ் ஐ வந்தால் தனி அறையில் இருக்க வேண்டும். தனியாக டவல், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
கண் வலிதான் என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக் கூடாது. சில நேரங்களில் கருவிழி பாதிப்பு கூட ஏற்படலாம். பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ பிரச்சினை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவே மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும்.
தங்களது தனிப்பட்ட பயன்பாட்டு பொருள்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.