இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

“தவெக ஆட்சி கவிழும் என்ற மு.க.ஸ்டாலினின் கருத்து ஏற்புடையது அல்ல” - மு.வீரபாண்டியன்

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: “தவெக ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏற்புடையது அல்ல. பழுத்த அரசியல்வாதி, முன்னாள் முதல்வர், மூத்த அரசியல்வாதியான கருணாநிதியிடம் அரசியல் கற்றுக் கொண்ட அவர் இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்த கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசு விவசாயிகளுடன் கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகளவு மக்களின் ஆதரவு உள்ளது. எங்களால் இப்போதுக்கூட ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்ட முடியும். அந்த வலிமை எங்களுக்கு உள்ளது. ஜனநாயத்துக்காக, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடியும். தனித்தும் செயல்பட முடியும்.

இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நிற்பது, திராவிட கட்சிகளுக்கு ஆதரவான பொதுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை. யார் வேண்டுமாலும், எங்கு வேண்டுமாலும் போட்டியிட உரிமை உள்ளது. ஆனால் மக்கள்தான் யார் வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.

தவெக ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏற்புடையது அல்ல. பழுத்த அரசியல்வாதி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மூத்த அரசியல்வாதியான கருணாநிதியிடம் அரசியல் கற்று கொண்டவர் இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது. சட்டத்துக்குட்பட்டு தவெக தொடர்ந்து ஆட்சி அமைக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் விரும்ப வேண்டும்.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமாலும், எந்தக் கட்சியில் வேண்டுமாலும் சேரலாம். ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் ஜனநாய கட்சிகளை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒத்த கருத்துடைய, உழைக்கும் மக்களுக்கு துணையாக இருப்பவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும்” என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT