சென்னை: ‘காவல்துறை நிர்வாகத்தை முதல்வர் சீரமைக்க வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மு.வீரபாண்டியன்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர், காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அதிர்வலைகள் அடங்காத நிலையில், தூத்துக்குடி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் தந்தையும், மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப்போக்கிலும், நடைமுறையிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கன்னியாகுமரி, தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமான்: சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்து கொல்லப்பட்ட சுவடுமறைவதற்குள் அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டிருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.
மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெக ஆட்சியில் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் அரிதான வழக்குகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது.
எந்த குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலமே பெற்றுதர வேண்டும். காவல்துறை எதேச்சதிகாரப் போக்கோடு குற்றம் சாட்டப்பட்டவரின் மீது தாக்குதல் நடத்துவதை ஒருநாளும் ஏற்க முடியாது.
காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட அருணாச்சலம் மரணத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.